Wednesday, February 11, 2009

இராஜ யோகம் - 1

கடவுளை அடையும் அல்லது தரிசிக்கும் நிலைக்குச் செல்ல உதவுகின்ற வழி முறைகளுக்கு யோகம் என்று பெயர். யோகத்திலே நான்கு வகை இருப்பதாக சுவாமி சித்பவானந்தர் விளக்கியிருக்கிறார். பக்தி யோகம், கர்ம யோகம், ஞான யோகம் மற்றும் இராஜ யோகம். பக்தி யோகம் என்பது அன்றாடம் எளிதாக தத்தம் மதத்தின்பாலான வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று .இறைவனை வழிபடும் முறையாக இறைவனைத் தரிசிக்கும் யோகத்தை பக்தி யோகம் என்றழைக்கிறார்கள். இவ்வுலகத்தில் உள்ள அறுதிப் பெரும்பான்மையோருக்கு எளிதாக எடுத்தாளப்படக்கூடிய யோகமாக இது இருப்பதினால் மத சம்பந்தமான கோயில்களும் மதகுருமார்களும் அவரவர் சமயங்களும் தோன்றியிருக்கின்றன. கர்ம யோகம் என்பது காரியங்களைச் செய்வதன் மூலம் இறைவனிடம் நெருங்குவது. தர்ம காரியம், அன்ன தானம், மற்றும் இன்னபிற தானச் செயல்களைச் செய்வதன் மூலம் இறைவனை நெருங்கிச் செல்வது கர்ம யோகமாகும். ஞான யோகம் என்பது கற்ற றிதல் மூலமும் கற்று அறிந்த பெரியவர்களிடம் சீடர்களாக .இருந்து கடவுளை அடையும் வழிமுறைகளை அறிவது ஞான யோகம் ஆகும். இதற்கு அப்பாற்பட்டு, பக்தி வழியன்றி, கர்ம வழியன்றி, ஞான வழியன்றி தனக்குள் தானே உள் சென்று கட உள் கடவுளைக் காணுவது இராஜயோக வழியாகும்.

ராஜயோகம் எனப்படுவது அஷ்டாங்க யோகம் என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது எட்டு வகையான யோகங்களை உள்ளடக்கியதே ராஜயோகம் எனப் பகரப்படுகிறது.

அந்த எட்டு வகையான யோகங்கள் யாவை?  

1. யமம் 
2. நியமம் 
3. ஆசனம் 
4. பிராணாயமம் 
5. பிரத்தியாஹாரம் 
6. தாரணை 
7. தியானம் 
8. சமாதி


இவை ஒவ்வொன்றும் ஒரு யோக நிலை. யமம் முதல் சமாதி வரை அத்தனை யோக நிலைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக அடைவது இதற்கான வழி முறை. அதே சமயம் ஒவ்வொரு யோக நிலையின் மூலமும் நேரடியாக சமாதி என்கிற உன்னத நிலையை அடைய முடியும். ஆனால் அதற்கான காலநிலை அனுஷ்டிக்கும் மானுடரின் தீவிரத்தைப் பொறுத்து அவர்தம் வாழ்நாளிலோ அல்லது முன்பாகவோ அடையப் பெறுகின்றனர். இனி ஒவ்வொரு யோக நிலையைப் பற்றியும் சற்று விளக்கமாகக் கண்ணுறலாம். யமம் மற்றும் நியமம் மனிதனின் இயற்பாங்குகளுக்குள் உட்பட்டதாகும், மனிதருள் ராட்சஸ, மனித மற்றும் தேவ கணங்கள் உள்ளதாக வான சாஸ்திரங்கள் கூறுகின்றன. குறிப்பிட்ட வான சாஸ்திர நிலைப்பாட்டு நேரத்தில் பிறந்தவர்கள் குறிப்பிட்ட கணத்தை அதாவது அந்தக் கணத்திற்குறிய குணாதிசயங்களை மேலோங்கக் கொண்டிருப்பர் என்பதாக வான சாஸ்திரங்கள் வரையறுக்கின்றன. யமம் மற்றும் நியமம் தேவ கணத்தைக் குணாதிசயமாகக் கொண்டோருக்கு எளிதாகக் கைக்கொள்ளக் கூடிய குணங்களாகும், யமம் என்பது ஐந்து வகையான குணங்களைக் கொண்டதாகும்.  

1. அஹிம்ஸை 
2. சத்யம் 
3. அஸ்தேயம் 
4. பிரம்மச்சரியம் 
5. அபரிக்ரஹம்

Saturday, September 8, 2007

படித்ததில் மனதில் நிலைத்தது - 2

மற்றவர்களுடைய குலத்தைப் பற்றி நிந்திக்கிறவன் நல்ல மனிதன் அல்ல (p46)

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1,
விளையாட்டுக்காகச் சொல்லப்படுகிற பொய், பெண்களிடத்தில் சொல்லப்படுகிற பொய், உயிருக்கு அபாயம் ஏற்படும் காலத்தில் சொல்லப்படும் பொய், சொத்தெல்லாம் பறிபோகும் காலத்தில் சொல்லப்படுகிற பொய் ஆகியவையும், விவாஹ காலத்தில் சொல்லப்படுகிற பொய்யும் பாபத்தை வருவிக்கிற பொய்கள் ஆகாது.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தர்மம் அறிந்தவன் அதர்மம் செய்திருக்கிறாய். தர்மம் தெரிந்தும், அதர்மத்தைச் செய்த உன்னைக் கிழட்டுத்தன்மை விரைவில் பற்றிக் கொள்ளும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஒருவன் விரும்பியதை அனுபவித்து விடுவனால் அவனுடைய ஆசை அடங்கி விடுவதில்லை. அது மேலும் அதிகரிக்கிறது. தீயில் நெய்யில் விட்டு ஹோமம் செய்யும்போது, அந்தத் தீ அணைந்து விடுவதில்லை. மேலும் மேலும் கொழுந்து விட்டு எரிகிறது. அதேபோல் ஆசை என்னும் தீயில் அந்த ஆசையை அனுபவித்தல் என்ற நெய்யை விட்டு, அந்தத் தீயை அணைத்து விட முடியாது. மண், பொன், பெண் எதுவானாலும் சரி, ஆசைப்பட்ட அளவு பெற்றதனால் எவனும் திருப்தி அடைவதில்லை. ஒரு நிலையை அடைந்த பிறகு மேலும் வேண்டுமென்றே ஆசைப்படுகிறான். ஆகையால் இதற்குத் தீர்வு ஆசைப்பட்டதை அனுபவிப்பது அல்ல. ஆசையை விட்டு ஒழிப்பதுதான் தீர்வு. அறிவு முதிர்ச்சி இல்லாதவர்களால் ஆசையை விட முடியாது. அவர்கள் உடல் தளர்ச்சி அடைந்தாலும், ஆசை தளர்ச்சி அடைவதில்லை. அறிவு முதிர்ச்சி இல்லாதவர்களுக்கு ஆசை என்பது உயிருள்ள வரையில் கூடவே இருக்கும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மோசம் செய்வது, கோபமுறுவது, ஏமாற்றுவது, பொறாமைப்படுவது ஆகியவற்றை உண்மையான மனிதன் விட்டொழிக்க வேண்டும். தாய் தந்தையர், மூத்த சகோதரன், முனிவர்கள், பொறுமை உள்ளவர்கள் இவர்களை ஒருபோதும் அவமதிக்கக் கூடாது. அறிவு சக்தி உடையவன், பொறுமை உள்ளவனாக இருப்பான். அது இல்லாதவனே கோபிஷ்டனாக இருப்பான்.

விரோதம் ஏன் வருகிறது என்பதைக் கூறுகிறேன் கேள். கெட்டவன், நல்லவனை விரோதிப்பான். அழகில்லாதவன் அழகுள்ளவனை விரோதிப்பான். அதாவது தன்னிடமில்லாத சிறப்பு வேறு ஒருவனிடம் இருப்பதைப் பார்த்தால், அப்போது சிறப்பில்லாதவன் அவனை விரோதிப்பான். இது இகழத்தக்கது.

கோபமடைபவனை விட கோபமடையாதவன் உயர்ந்தவன். பொறுமை இல்லாதவனை விட, பொறுமையுள்ளவன் மேலானவன். ஒருவன் நம்மை ஏசினாலும், அதற்குப் பதிலான நாம் அவனை ஏசக்கூடாது. பொறுமையுள்ளவன் துன்பப்படுத்தப்படும்போது அவன் மனத்தில் உண்டாகும் வருத்தம், துன்புறுத்தியவனை இன்னலுக்குள்ளாக்கியே தீரும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நம்மைவிட தெய்வம் அதிக வலிமை வாய்ந்தது என்பதை ஒருவன் அறிந்து கொண்டால், அவன் வெற்றி வரும்போது கர்வத்தை அடைய மாட்டான். தோல்வி வரும்போது சோர்வடைய மாட்டான். புத்தி உள்ளவன் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியாகத்தான் இருப்பான். புழுக்கள், மீன்கள், மிருகங்கள், பறவைகள் போன்றவை மட்டுமல்லாமல், ஜடப்பொருள்கள் என்று கருதப்படும் மரங்களும், கட்டைகளும் கூட காலப்போக்கில் நசிந்து மாண்டு விடுகின்றன. இயற்கை நியதியின் இந்த நியாயத்திற்கு மனிதனும் விலக்கல்ல. அப்படி இருக்க, நாம்தான் இதைச் செய்தோம் என்று கர்வம் மனிதனுக்கு வரக்கூடாது.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

எட்டு வகையான திருமணங்கள்.

1. மணப்பெண்ணை நன்கு அலங்கரித்து, மணமகன் கையில் கொடுத்து விடுவது பிராம்ம விவாஹம்.
2. யாகம் செய்து அதன் முடிவில் யாகத்தை நடத்தியவருக்கு காணிக்கையாகப் பெண்ணைக் கொடுப்பது தைவ விவாஹம்.
3. மணமகனிடம் இரண்டு பசுக்களைப் பெற்றுக் கொண்டு பெண்ணைக் கொடுப்பது ஆர்ஷ விவாஹம்.
4. மணமகளும், மணமகனும் சேர்ந்து தர்மத்தின் வழியில் செல்லட்டும் என்று தீர்மானித்துக் கொண்டு பெண்ணைக் கொடுப்பது ப்ராஜாபத்ய விவாஹம்.
5. பெருமளவில் பணத்தைப் பெற்றுக்கொண்டு பெண்ணைக் கொடுப்பது அசுர விவாஹம்.
6. பெண்ணும் ஆணும் மனமொத்து தாங்களாகவே கலந்து கொள்வது காந்தர்வ விவாஹம்.
7. தூக்கத்திலும், குடி மயக்கத்திலும் ஒருவன் ஒரு பெண்ணைத் தூக்கிக் கொண்டு போய் மணம் செய்து கொண்டால் அது பைசாச விவாஹம்.
8. சண்டையிட்டுப் பலாத்காரமாக ஒரு பெண்ணைக் கொண்டுபோய் கல்யாணம் செய்து கொண்டால் அது ராட்சஸ விவாஹம்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பாவம் செய்கிறவர்கள் தங்கள் செயலை யாரும் அறியவில்லை என்று நினைக்கிறார்கள். ஆனால் சூரியன், சந்திரன், காற்று, அக்னி, ஆகாயம், பூமி, தண்ணீர், தன்னுடைய மனம், பகல், இரவு, பகலும் இரவும் சந்திக்கும் வேளைகள் ஆகியவை ஒவ்வொரு மனிதனும் ரகசியமாகச் செய்யும் காரியங்களையும் அறிந்தே தீருகின்றன. ஒவ்வொரு மனிதனுடைய செயலையும் கடவுள் பார்த்துக்கொண்டே இருக்கிறார். நாம் செய்யும் காரியம் நம் மனசாட்சிக்குத் திருப்தி உள்ளதானால், அதில் பாவம் வந்து சேராது. தன் மனசாட்சிக்கு திருப்தி என்று ஒருவன் தன்னை ஏமாற்றிக்கொண்டு ஒரு செயலைச் செய்தால், அந்தப் பாவம் அவனை விடாது.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

எவள் கணவனை உயிராக நினைக்கிறாளோ அவளே மனைவி. எவள் கற்புடையவளோ அவளே மனைவி. தனிமையில் தோழியாகவும், தர்ம காரியங்கள் நடத்தும் போது நல்லதை எடுத்துச் சொல்கிற தந்தையாகவும், கஷ்டப்படுகிறபோது பரிவு காட்டும் தாயாகவும், வழி நடந்து செல்லும்போது உற்ற துணையாகவும் இருப்பவளே மனைவி. மனைவி உள்ளவனே சுற்றத்தார் உள்ளவன். மனைவி உள்ளவனுக்கு செல்வம் உண்டு. இது மட்டுமல்ல, கணவன் தன் மனைவியின் கர்ப்பத்தில் தானே புகுந்து, அவளிடம் அவனே குழந்தையாகப் பிறக்கிறான். ஆகையால், கணவன் தன் மனைவியைத் தாயைப் போலவும் மதிக்க வேண்டும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஒருவனுக்குத் தருவதாக வாக்களிக்கப்பட்ட பெண், ஒருவனுக்கு மணம் செய்விப்பவதாகப் பெற்றோர்களால் மனதால் தீர்மானம் செய்யப்பட்ட பெண், வேறு புருஷனிடத்தில் ஆசை வைத்திருக்கும் பெண் ஆகியோர் விடத்தக்கவர்களேயன்றி, மற்ற ஒருவனால் மணக்கத்தக்கவர்கள் அல்ல.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Courtesy: அல்லயன்ஸ் பப்ளிஷார்ஸ்

படித்ததில் மனதில் நிலைத்தது - 1

அல்லயன்ஸ் பப்ளிஷாரால் வெளியிடப்பட்ட மஹாபாரதம் பேசுகிறது என்ற சோ எழுதிய புத்தகத்தை விலைக்கு வாங்கிப் படித்துக் கொண்டிருக்கிறேன். இருபாகங்களாக வெளிவந்திருக்கும் இப்புத்தகங்களில் இருந்து என் மனதில் நிலைத்த சில வரிகளை இப் பதிவுகளில் தொடர்ந்து பதிவுசெய்ய இருக்கிறேன்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நல்ல மனிதர்களுக்குப் பொறுமைதான் பலம். மற்றவர்கள் எவ்வளவு நிந்தித்தாலும் எவன் அதைப் பொறுத்துக்கொள்கிறானோ அவன் இவ்வுலகத்தையே வென்றவன். கோபத்தை அடக்குகின்றவன், மற்றவர்களுடைய நிந்தனையைப் பொறுப்பவன், பிறர் தன்னை வருத்தியும் அவர்களை வருத்தாமல் இருப்பவன் உயர்ந்தவனாகிறான். நூறு வருட காலம் தொடர்ந்து யாகம் செய்பவனை விட, பொறுமையுடன் இருப்பவன் மேலானவன். கோபம் இழிவானது. கோபக்காரனை விட்டும் மனைவி, மகன், வேலையாள், சகோதரன், நண்பன் ஆகியோர் விலகி விடுவார்கள். தர்மமும், சத்தியமும் அவனை விட்டுப் போகும்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Courtesy: அல்லயன்ஸ் பப்ளிஷார்ஸ்